Wednesday, April 22, 2020

ஐயா ராமு. பெருமாள் தேவர்



உத்தம வீரர்
A.R..பெருமாள்தேவர் Ex.MLA.
------------------------------------
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வாழ் அகமுடையார் சமூகம் நீண்டநெடிய வரலாற்று அடையாளத்தை கொண்டவர்கள்.

அருப்புக்கோட்டை மாநகரின் மையப்பகுதியே, பெரிய தெரு ஆகும். அந்த மையப்பகுதியில், அகமுடையார் பேரினத்தின் ஒரு உட்பிரிவான இராஜகுல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வாழும், 18 தலைகட்டு அகமுடையார் குடும்பத்தினர் சேர்ந்து, 
1935 ஆம் ஆண்டு உருவாக்கிய உறவின்முறையே, "அருப்புக்கோட்டை அகம்படியர் உறவின்முறை சங்கம்"

அந்த 18 தலைகட்டு உறவின்முறையை சேர்ந்த குழந்தைவேல் தேவர் அவர்களின் அருந்தவப்புதல்வர்
கு.இராமுத்தேவர் அவர்கள், சிகப்பித்தாய் அவர்களை இல்வாழ்க்கை துணைவியாக கரம் பிடித்தார். சிகப்பித்தாய்க்கு குழந்தை செல்வம் அமையவில்லை. 
பிறகு சிகப்பித்தாய் அவர்களே, தனது உடன்பிறந்த தங்கை பாக்கியத்தம்மாள் அவர்களை தனது கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.

இராமுத்தேவர் - பாக்கியத்தம்மாள் தம்பதியினருக்கு 6 குழந்தை செல்வங்கள் பிறந்தன.

1) இரா.மகராஜ தேவர்,
2) ‎மீனாட்சியம்மாள்,
3) கண்ணம்மாள்,
4) சுப்பம்மாள்,
5) ‎கணபதியம்மாள்
6) ‎இரா.பெருமாள்தேவர்,

ஆறாவது குழந்தை செல்வமாக இக்கட்டுரையின் நாயகன்  ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்கள், 
1925 ஆம் ஆண்டு, மே - 17 நாள் பிறந்தார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்களின் குல தெய்வம், நெல்லை மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடுகச்சி மதில் ஊரில் அமைந்துள்ள நல்ல மாடசாமி, சிவனடைந்த பெருமாள் என்ற தெய்வங்களும், அதன் அருகில் உள்ள சித்தூர், தென்கரை மகராஜா தெய்வமும் இவர்களின் குலதெய்வங்கள் ஆகும். இந்த தெய்வங்களின் நினைவாகவே இராமுத்தேவர் அவர்கள் தனது மூத்த மகனுக்கு மகராஜன் என்றும், இளைய மகனுக்கு பெருமாள் என்றும் பெயர் கூட்டினார்.

இல்வாழ்க்கை, 

ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்கள், ஆவுடையம்மாள் அவர்களை இல்வாழ்க்கை துணையாக கரம்பிடித்தார். ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்களுக்கு
 6 குழந்தை செல்வங்கள் பிறந்தன. 3 ஆண் மகவுகளும், 3 பெண் மகவுகளும்,

1) ஏ.ஆர்.பி.இளங்கோ,
2) ‎ஏ.ஆர்.பி.பாண்டியன்,
3) ‎பிரபாவதி
4) ‎ஏ.ஆர்.பி.சரவணன்,
5) ‎செல்வி,
6) ‎பாக்கியம்

அரசியல் பணி,

1937 சட்டபேரவை தேர்தல் சமயம், பசும்பொன் தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மகாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர். பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார். அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ஜே என்று கூறுவது வழக்கு, கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின்தொடர்ந்து வர, சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை இராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் சிறுவன். அந்த சிறுவனே பின்னாளில் ஏ.ஆர்.பெருமாள்தேவர் என  அழைக்கப்பட்டார்.

ஏ.ஆர.பெருமாள் தேவர் தனது இளம் வயதிலே பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் அறிமுகத்தை பெற்றார். அன்றுமுதல் அவரையே மானசீக குருவாக ஏற்று, பார்வர்ட் பிளாக் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, பசும்பொன் தேவரின் உண்மை விசுவாசியாகவும், அவரின் அன்பை பெற்றவராகவும் திகழ்ந்தார்.

1966 ஆம் ஆண்டு "நாட்டுக்கு ஒரு நல்லவன்" என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு நாடகத்தை எழுதி அதை அரங்கேற்றினார்.

சட்டமன்ற களத்தில் ஏ.ஆர்.பி.

ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் பசும்பொன் தேவரின் நம்பிக்கைக்கு பாத்தியப்பட்டவராக இருந்தாலும், 
பசும்பொன் தேவர் மறைவுக்கு பின்பே, 
பார்வர்ட் பிளாக் கட்சியில், அகமுடையார் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டியது. தேவர் உயிருடன் இருந்த காலகட்டத்தில் அகமுடையார் சமூகத்தினருக்கு எந்த வாய்ப்பு வழங்காது என்பது மட்டுமே  குறையாக உள்ளது.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், காரியாபட்டி தொகுதியில் சுதந்திரா கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.

மொத்த வாக்காளர்கள் - 89,931,
பதிவான வாக்குகள் - 65,979,
செல்லாத வாக்குகள் - 2,813,
போட்டியிட்ட வேட்பாளர்கள் - 3,

1) ஏ.ஆர்.பெருமாள்      - 28,484.
    (சுதந்திரா கட்சி)
2) பாஸ்கரன்சேர்வை - 27,366.
    (காங்கிரசு)
3) கல்யாணித் தேவர் -   7,316.
    (சுயேட்சை)

இந்த தேர்தலில் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் 1118 வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றார்.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், காரியாபட்டி தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.

மொத்த வாக்காளர்கள் - 94,337,
பதிவான வாக்குகள் - 63,737,
செல்லாத வாக்குகள் - 2,377,
போட்டியிட்ட வேட்பாளர்கள் - 4,

1) ஏ.ஆர்.பெருமாள்               - 31,499.
    (பார்வர்ட் பிளாக்)
2) எம்.முத்துவேல்சேர்வை  - 22,175.
    (நிஜலி.காங்கிரசு)  
3) எஸ.டேவிட்ராமசாமி         -  7,096.
     (சுயேட்சை)
4) வி.மெய்யத்தேவர்             -     590
     (சுயேட்சை)

இந்த தேர்தலில் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் 9,324 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1967 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காரியாபட்டி சட்டமன்றத் தொகுதி, 1971 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்டு, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இதன் பகுதிகள் சேர்க்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு, நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், திருமங்கலம் தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.

மொத்த வாக்காளர்கள் - 1,17,383,
போட்டியிட்ட வேட்பாளர்கள் - 4,

1) என்.எஸ்.வி.சித்தன்  - 35,181
    (காங்கிரசு)
2) ஏ.ஆர்.பெருமாள்.      - 31,679
    (பார்வர்ட்பிளாக்)
3) எஸ்.ஏ.இங்கர்சால்.   -   8,033
    (ஜனதா (ஜெ.பி))
4) எஸ்.கிருஷ்ணன்       -      873
     (சுயேட்சை)

இந்த தேர்தலில் காங்கிரசு கட்சி வேட்பாளரிடம், வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். 

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளராக களம் இறங்கினார்.

மொத்த வாக்காளர்கள் - 1,41,982.
பதிவான வாக்குகள் - 1,00,465.
செல்லாத வாக்குகள் - 1,777.
போட்டியிட்ட வேட்பாளர்கள் - 4.

1) வி.தங்கபாண்டியன்     - 44,990.
    (திமுக)
2) வி.எஸ்.பஞ்சவர்ணம்   - 29,467.
    (அதிமுக (ஜெ) )
3) ஆர்.செல்லையா            - 18,466.
     (காங்கிரசு)
4) ஏ.ஆர்.பெருமாள்.          -    3,521.
     (பார்வர்ட் பிளாக்)
மிதமுள்ளவேட்பாளர்கள் 16 நபர்கள் சுயேட்சைகள்,

திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் (மறவர்) தவிர மற்ற மூவரும் அகமுடையார் பேரினத்தை சார்ந்தவர்கள்.

இந்த தேர்தல் ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை.

 1967, 1971, 1980, 1989 என் நான்கு பொது தேர்தல்களில் போட்டியிட்டு 1967, 1971 என இரண்டு முறை வெற்றி பெற்றார். 1980, 1989 என இரண்டு முறை தோல்வி அடைந்தார்.

 1971 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியின் சட்டமன்றத் தலைவர்,

1974 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் பார்வர்ட் பிளாக் நாடாளுமன்ற உறுப்பினர் மூக்கையா தேவர் அவர்கள் கச்சத்தீவின் தமிழர் உரிமை பிரச்சனையை பற்றி விரிவாக பேசினார். அதே காலகட்டத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பார்வர்ட் பிளாக் சட்டமன்ற உறுப்பினரான ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் கச்சதீவு உரிமை பிரச்சனையை பற்றி, தமிழக சட்டமன்றத்தில் பேசிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்.

1979 ஆம் ஆண்டு மூக்கையாத்தேவர் அவர்களின் மறைவுக்கு பின் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் பார்வர்ட் பிளாக் கட்சியின் அ.இ.தேசிய துணைத்தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றினார்.

1991 ஆம் ஆண்டு ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியின் 
அகில இந்திய தேசிய தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயலாற்றினார்.

அரசியல் காரணங்களுக்காக மும்முறை சிறை புகுந்தார்.

அருப்புப்கோட்டை சிறுவர் நலனுக்காக பள்ளிக்கூடங்கள் நிறுவ உதவி புரிந்தார்.

பத்திரிக்கைகளுக்குக் கட்டுரைகள் வழங்குவதோடு தானாகவே கட்டுரைகளும், "புயலில் தேவர்" என்ற புத்தகமும் வெளியிட்டார். அச்சக உரிமையாளர்.

1993 ஆம் ஆண்டு முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வீரவரலாறு மகா காவியம் என்ற பெயரில் பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து நூல் வடிவாக வெளியிட்டார்.

1995 ஆம் ஆண்டு, அருப்புக்கோட்டை மாநகரில், அகம்படியர் மகால் அருகில் பசும்பொன் தேவர் அவர்களுக்கு முழு திருவுருவ வெண்கல சிலை அமைத்தார். அவருக்கு பிறகு அந்த சிலையை அகம்படியார் உறவின்முறையினர் பராமரித்து வருகின்றனர். 

தமிழகத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு தேவர் சிலைக்கு பாதுகாப்பாக, இரும்பு கம்பியிலான கூண்டுதான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அருப்புக்கோட்டை அகமுடையார் உறவின்முறையினர், குண்டுதுளைக்காத கண்ணாடி கூண்டு அமைத்து பசும்பொன் தேவருக்கு சிறப்பு செய்துள்ளனர். 

பசும்பொன் தேவரின் முழுமையான நம்பிக்கையை பெற்றவர், அதன் காரணமாக பசும்பொன் தேவர் தன் சொத்துக்களை பிரித்து உயில் எழுதிய போது, அந்த சொத்தின் ஒரு பங்கை, 
ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்களின் பெயரில் எழுதினார். பசும்பொன் தேவர் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்தார். இதில் ஏ.ஆர்.பெருமாள் தேவர் உட்பட 12 பேர் தேவர் பெயரில் அமைந்த அறக்கட்டளையில் அச்செத்துக்களை இணைத்து விட்டனர்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்கள் அச்சொத்துக்களை தனக்கென வைத்துக் கொள்ளாமல், பசும்பொன் தேவர் பெயரில் அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரி அறக்கட்டளையில் அச்சொத்துக்களை இணைத்தார்.

பசும்பொன் தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும், கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகுளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவர் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இணக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக  அறிவிக்கவும், மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்.

பிற்காலத்தில் முதுமையின் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி அருப்புக்கோட்டையிலே தங்கி, அகம்படியர் உறவின்முறை வளர்ச்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். அச்சங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர்.
இன்று பல கோடி சொத்துக்களாக அச்சங்கத்தை மாற்றிய பங்கில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.

இறுதியில் இம்மண்ணுலக வாழ்க்கையையும் துறந்து
1998 ஆம் ஆண்டு, ஏப்ரல் - 21 ஆம் நாள், நிரந்தரமாக இம்மண்ணுலக வாழ்வில் இருந்து விடைபெற்றார்.

தமிழ்கூறு நல்லுலகில் மொழி, இனம், இலக்கியம், கலை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அகமுடையார் பேரினம் தனது பங்களிப்பை திறம்பட பதிய வைத்துள்ளது. ஆனால் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் இம்மரபினருக்கு உரிய அங்கிகாரம் உரியமுறையில் அளிக்க தவறிவிட்டது.

அந்த வகையில் ஏ.ஆர்.பெருமாள்தேவர் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணம்,

அகமுடையார் பேரினத்தில் பிறந்தது மட்டுமே இவரது தவறு!

அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஏ.ஆர்.பெருமாள் அவர்களின் புகழை சிறப்பிக்கும் விதமான படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு இதுவரை நடத்தப்பட வில்லை என்பதுதான் வேதனை. அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி சுவரோட்டிகளில் யார் யார் உருவப்படமோ இடம் பெறுகிறது. ஆனால் கட்சிக்காக பாடுபட்ட ஏ.ஆர்.பி அவர்களை அக்கட்சி மறந்து ஏனோ!

இனிமேல் இவரை போற்ற வேண்டியது, இவரது வரலாற்றை வெளிகொண்டு வருவது, சிலை திறப்பது என எல்லாவற்றையும் அகமுடையார் பேரினத்தின் இளம்தலைமுறையினர் மேற்கொள் வேண்டும்.

வருகின்ற ஏப்ரல் 21 ஆம் நாள் அவரது 
22 ஆம் ஆண்டு நினைவுநாள் !

ஐயா ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம்!

அவர் விட்டுச் சென்ற பொது வாழ்க்கை பணியை, அவரது வாரீசாக உள்ள அவரது பேரன் ஏ.ஆர்.பி.இள.ராமுத்தேவர் அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார். 

வாழ்க! ஐயா ஏ.ஆர்.பெருமாள்தேவர்
அவர்தம் புகழ், 

சான்றாத ஆவணங்கள்,

1) தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை 
    "யார்-எவர்" 1967,
    ‎GOVERNMENT OF MADRAS (1968).
2) தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை 
    "யார்-எவர்" 1971
    ‎GOVERNMENT OF TAMIL NADU (1972).
3) தேர்தல் கண்ணோட்டம்,
     இரா.பாஸ்கர், 
     ஸரிகம்பதநி வெளியீடு, பதிப்பு - 2001.
--------------------------------------
கட்டுரை ஆக்கம்,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.

இக்கட்டுரையை படிக்கும் உறவுகள் லைக் மட்டும் பண்ணாமல் மற்ற உறவுகளின் பார்வைக்கு பகிர்ந்து உதவவும்.





வள்ளல் பச்சையப்ப முதலியார்


Thursday, May 30, 2019

பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு



பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் அகமுடையார் இனத்தில்  பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தமிழ் ஞானம்

அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார்.

ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார். முதன் முதலாக முருகனை போற்றி "கங்கையை சடையிற் பரித்து" என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.

திருமணம்

சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் திருமணஞ் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன.

முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது. அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார்.

அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.

*பொய் பகரல்*
சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார். சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார்.

அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார். அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. "எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?" எனக்கூறி அச்சுறுத்தியது.

சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, "தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு" வேண்டினார். அதற்கு, இறைவன், "இனி பழனிக்கு வரக்கூடாது" என உறுதி அளிக்குமாறு கூறினார். சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.

சண்முக கவசம்

அடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது. சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார். 1891ம் ஆண்டு தமக்கு வந்த இன்னல் நீங்கும் பொருட்டு அ முதல் ன முடிய (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18) 30 பாடல்களால் சண்முக கவசம் இயற்றினார். இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர்.

சிறிது நாள் கழித்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்த பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.

வழக்குகளில் வெற்றி

அடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.

பாகம் 2

குமர கோட்ட தரிசனம்

சுவாமிகள் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி தல யாத்திரை மேற்கொண்டார். மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள பல திருக்கோயில்களை தரிசித்து விட்டு ஊர் திரும்ப எண்ணினார்.

அப்போது, ஒரு சிவந்த மேனியுடைய இளைஞர் அடிகளாரை அணுகி, "இங்கு வந்த காரியம் யாது" என வினவினார். அதற்கு சுவாமிகள், "ஆலய தரிசனத்துக்காக" என்றார். "குமரகோட்டம் தரிசித்ததுண்டா?" என இளைஞர் கேட்டார். அதற்கு அடிகளார், "அது எங்குள்ளது" என்றார். அதற்கு இளைஞர் "என் பின்னே வருக" என கூறி அழைத்து சென்றார்.

குமரகோட்டம் திருக்கோயிலை காண்பித்து விட்டு மறைந்து போனார். இது ஆறுமுகப்பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த சுவாமிகள், கண்ணீர் பெருக்குடன் குமரகோட்ட முருகப்பெருமானை வழிபட்டார். பின் பாம்பன் வந்தடைந்தார்.

தவம் புரிதல்

அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார்.

அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாள், பேய்கள் அவரை சூழ்ந்து தவத்திற்கு இடையூறு செய்தன.

பின்னர் ஒரு ஆவி, அவரை தூக்க முயன்றது. சுவாமிகள் ஷடக்ஷர மந்திரத்தை ஓங்கி கூறினார். அந்த பேய்கள் அவரை விட்டு நீங்கி மறைந்து போனது. அடிகளார் தவத்தை தொடர்ந்து புரிந்து வந்தார். எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார்.

அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், "தவத்திலிருந்து எழுக" என்ற ஒலி கேட்டது. "முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்" என சுவாமிகள் கூறினார். "முருகன் கட்டளை! எழுக" என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். அது முதல் வெள்ளை அங்கி அணியலானார்.

துறவு பூணுதல்

1895ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் தமது சீடர் ஒருவரிடம் தாம் துறவு பூண்டு செல்லும் முடிவை கூறினார். பின்னர், பாம்பனை விட்டு நீங்கி ஒரு படகு மூலம் வடகரை அடைந்தார். பின்னர் சென்னை செல்லும் எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவ்வாறே சென்னை வந்தடைந்தார். அங்கு ஒருவர் அடிகளாரை அணுகி அவரை வைத்தியநாத முதலித் தெருவில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்ப்பித்தார்.

அந்த இல்லத்தின் உரிமையாளரான ஒரு அம்மையார், தமது கனவில் அடிகளாரை உபசரிக்குமாறு கட்டளை பிறந்ததாக சுவாமிகளிடம் கூறி, அடிகளாருக்கு அன்னம் படைத்து உபசரித்தனர். சுவாமிகள் முருகப்பெருமானின் அருட்செயலை எண்ணி உவந்து இருந்தார். சென்னையில் அடிகளாருக்கு பல சீடர்கள் சேர்ந்தனர். பின்னர், சென்னையில் உள்ள திருத்தலங்களை தரிசித்து மகிழ்ந்தார். முருகன் பால் பல திருப்பாக்களை பாடி அருளினார்.

காவியுடை தரித்தல்

சுவாமிகள் காசி செல்ல பெருவிருப்பங்கொண்டு ஆடித்திங்கள் தொடக்கத்தில் காசி யாத்திரை மேற்கொண்டார். பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்திகளை ஆறுமுக மூர்த்தியாகவே எண்ணி வழிபட்டார்.

பின்னர் காசி மாநகரம் சேர்ந்து அங்கு உள்ள குமரகுருபரர் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்த ஒரு வயோதிக அடியார் ஒருவர், சுவாமிகளுக்கு காவியுடை அளித்து, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். இது குமரகுருபரருடைய ஆணை என்று அடிகளார் உட்கொண்டு அவரை வணங்கி அவர் அளித்த காவி உடையை ஏற்றுக் கொண்டார். அன்று முதல், சுவாமிகள் காவியுடையை மட்டுமே அணியலானார்.

பின்னர் சென்னை வந்தடைந்தார். அடிகளார் எந்நேரமும் ஆறுமுகப்பெருமானை தியானிப்பதும், அப்பரமனை போற்றி பாடல்கள் பாடுவதும், மற்ற நேரங்களில் திருத்தல யாத்திரை புரிவதுமாகவே வாழ்ந்து வந்தார்.

பின்னத்தூர் அடைதல்

சென்னையை சுற்றியுள்ள திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார். அங்குள்ள அடியார்கள் சுவாமிகளை வணங்கி உபசரித்தனர்.

அங்கு சிவ நிந்தனையில் ஈடுபட்டு வந்த சில வைணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர். ஆனால், சுவாமிகளின் அருள்த் தன்மையினால், அத்தேவதை சுவாமிகளை கண்டு அஞ்சி தன்னை ஏவிய மந்திரவாதியை தாக்கி கொன்றது. சுவாமிகளை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முருகன் அருளால் அடிகளார்க்கு எந்த தீங்கும் நேரவில்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1914ம் ஆண்டு மீண்டும் சென்னை சேர்ந்தார்.

குமாரஸ்தவம் இயற்றல்

1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது. சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார்.

தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.

பாகம் 3

சுவாமிகளின் பாடல் தொகையும் பலன்களும்

1. முதல் மண்டலம் – குமரகுருதாச சுவாமிகள் பாடல்

2. இரண்டாம் மண்டலம் – திருவலங்கற்றிரட்டு 2 கண்டங்கள்

3. மூன்றாம் மண்டலம் – காசியாத்திரை, பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம்

4. நான்காம் மண்டலம் – சிறுநூற்றிரட்டு, திருத்தலத்தரிசனத்தின் போது பாடிய கட்டளை கலித்துறை, சேந்தன்செந்தமிழ், பத்துப் பிரபந்தம், குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, குமாரஸ்தவம், செக்கர் வேள் செம்மாப்பு, செக்கர் வேளிறுமாப்பு, சீவயாதனா வியாசம்.

5. ஐந்தாம் மண்டலம் – திருப்பா

6. ஆறாம் மண்டலம் – ஸ்ரீமத் குமார சுவாமியம்

இப்படி ஆறாயிரத்தறுநூற்றறுபத்தாறு பாக்களைச் செவ்வேட் பரமனுக்கு சூட்டிய பெருமையோடு சாத்திர நூல்களாகத் திருப்பா, பரி்பூரணானந்தபோதம், தகராலய ரகசியம் எனும் மூன்று நூல்களையும் சுவாமிகள் நமக்கு வழங்கினார்.

வடமொழி நூலார் மரபையொட்டி திருப்பா முதல் 10 பாடல்களுக்கு “திட்பம்” எனும் உரையும் பரிபூரணானந்தபோதத்துக்கு சிவசூரியப்பிரகாசம் எனும் உரையும் தகராலய ரகசியத்துக்குச் சதானந்த சாகரம் என்ற உரையும் வழங்கி உரையாசிரியர் ஆனார்கள். காசியாத்திரை என 608 பாடல்கள் பாடி முதற் பயண நூல் படைத்தவர் ஆனார்கள். 1906 ஆண்டு வடமொழி தவிர்த்து 50 வெண்பாக்களில் “சேந்தன் செந்தமிழ்” பாடி முதல் தனித்தமிழ் பனுவல் படைத்த “பாமணி” ஆனார்கள்.

சைவசமயசரபம்,நாலாயிரப்பிரபந்த விசாரம் படைத்ததன் மூலம் வாதநூல் வல்ல “பரசமயக் கோளறி” ஆனார்கள்.

கு-எனில் அறியாமை, ரு-எனில் அதைப் போக்குபவன்

கு-எனில் குணம், ரு-எனில் ரூபம், குணமும் ரூபமும் கொண்டவன் குரு – அவனை வழிபடுவோர்க்கு இவ்விரண்டு நலனையும் அருள்வான்.

கு-குருடு, ரு-அறிவு ஒளி-குருட்டு விழிக்கு அறிவு ஒளி அளிப்பவனே குரு.
அவனை நாட அவனருள் கூட அவன் பாடிய 6666 பாடல்களுமே நமக்குத் துணை – ஜனனக் கடல் கடக்க நாம் பிடிக்கும் புணை, துணை, எல்லாம் அவையே!

ஆறாயிரத்தருநூற்றறுபத்தாறையும் பாடிப் பரவிப் பரமனை வழிபடுவோர் – இகபர சௌபாக்கியங்களையும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வாம் மாண்படைவர்.

தமிழகத்தில் தோன்றிய தவசீலர்களில் சுவாமிகள் ஒருவரே தமது பாடல்களுக்கு இன்னின்ன பலன்கள் கிட்டுமென்று வரையறுத்து வாக்களித்தவர், முருகனிடம் வாக்குறுதி பெற்றவர்.

“நான் பாடு பாட்டை நவில்பவர்க்கு நலம் நல்காய்
கான்பாடு வண்டறையும் கழுகுமலை முருகா”

“எனைத் தள்ளினாலு மெனை நம்பினவர்த் தள்ளேல்
கனைத் தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா”

துன்புறுத்தும் நோயிலிருந்து விடுபடக் – குமாரஸ்தவம்

உலகில் நடைவருத்தும் பகைஒழிய – பகைகடிதல், சங்கடம் தரும் வழக்கு, சதிகாரர்களின் சழக்கு, வழிச்செலவில் வரும் ஆபத்து இவை களிலிருந்து நமைக் காக்க – சண்முக கவசம்

மகப்பேறு பெறுவதற்கு – வேற்குழவி வேட்கை

பாபநாசம், சத்துருநாசம் ஆயுள்விருத்தியுடன் சர்வார்த்த சித்தியும் முக்தியும் பெற- — அட்டாட்ட விக்ரக லீலை பாராயணம் செய்து பயன்பெறுவீர் பக்தர்களே!

இவ்வாறு நாள் தோறும் உணவு உண்பதற்கு முன் ஒள்வேள் கடவுளாகிய ஒப்பற்ற முருகனுக்கு வாடும் பூமாலை சூட்டாமல் வாடாப் பாமாலை சூடி வழிபட்டார் அப்பாவு எனும் குமரகுருதாசர் – அப்பொழுது சுவாமிகள் பெற்ற பேரின்பம் தான் என்னே?

பாடியே அறியா எளியேன் வாய்
பாடலுள் கிருபை எனவும் நினைந்தேன்
நேடியே அறியாத என் நினைவு
நினை நினைந்திடல் கருதியும் மகிழ்ந்தேன் –

இவ்வாறு பாடலோர் பாடி முடித்தபின் அவற்றை ஒரு நோட்டுப்புத்தகத்தில் சுவாமிகள் எழுதி வைத்திருந்தார்கள் .

பாகம் 4

சடக்கர உபதேசம்

நெல் வியாபாரம் ஒரு முகம்மதியரையும் கூட்டாளியாகக் கொண்டு பாம்பனில் தந்தையார் சொற்படி செய்து வருங்கால், அவண் வந்த செவ்வேட் பரமனடியார் சேது மாதவப் பெருமாள் கோயில் அர்ச்சகர் சேதுமாதவ ஐயர் என்பவர் சுவாமிகள் பாடல்கள் எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துப் படித்து புதுக்கோட்டை வித்துவான் குமாரசாமிப் பிள்ளையிடம் அளிக்க அவர் பார்வையிட்டு பாடல் நயமுடையது, துறவு நோக்கமுடையது, பதிப்பிக்கத் தக்கது எனப் பாராட்டி சாற்றுக் கவியும் வழங்கினார்.

பின்னர் பாம்பன் வந்து சேதுமாதவ ஐயர் நாளை விசய தசமி இன்று மாலை என் இல்லம் வா எனக் கூறிச் சென்றார். அவ்வாறே அப்பாவு தப்பாமல் அன்றிரவு சேதுமாதவ ஐயர் இல்லத் திண்ணையிற் இறங்கி மறுநாட்காலை இளங்காலைப் போதில் அக்னி தீர்த்தத்தில் மும்முறை மூழ்கி எழ ஐயர் திருவாறெழுத்து மந்திரத்தை அப்பாவுவுக்கு உபதேசித்து அருளினார். ஆசிரியரை வணங்கி அவர் அளித்த திருநீற்றை அருட்பிரசாதமாய்ப் பெற்று மகிழ்ந்த பொழுது அவர் உடன் “வடமொழி கற்பாயாக” என உத்தரவும் இட்டார்.

வடமொழியின் மாண்பு

சுவாமிகள் வடமொழியறிவு பெற்றதனாலேயே சாம வேதத்திலே சுவாமி என அழைக்கப்பட்ட சிறப்பு ஆறுமுகச் சிவனுக்கே கிட்டியது என்பதைப் பாடலாய்ப் பாடியருளினார். தன் சாத்திர நூல்களில் எல்லாம் வேதாகம உபநிடதக் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி குகபரத்துவக் கொள்கையை நிருவியருளினார்.

பிறப்பாலுயர்வு தாழ்வு இல்லையெனும் கருத்தை சாமவேத வஜ்ரஸுசிகோப நிஷதம் கொண்டு பரிபூரணானந்த போதம் நூலில் பகர்ந்தார். சைவசித்தாந்த பொதிவு என்ற ஆங்கில நூலில் வார வழிபாட்டின் தந்தை சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் (என்ஆசான்) பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியது. “Mean while he became well-versed in upanishdic and Agamic Love in Sanskrit” என்றுரைத்தல் காண்க. (TALKS ON SAIVA SIDDHANTA) தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் சுவாமிகளின் வடமொழிப் புலமையை தன் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் குறிப்பிடுகின்றார்.

“பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள்-சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்”

“குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்” . . . . . திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.

சுவாமிகள் வடமொழியிலியற்றிய “குமாரஸ்தவம்” தௌத்தியம், அட்டாட்ட விக்கிரகலீலை போல்வன என்றும் பாராயணத்திற்குரிய பனுவல்களாய் விளங்குகின்றன.

பாகம் 5

*கனவு கண்டார் “கனவதிகாரம் விண்டார்”- இல்லறமும் நன் மக்கட்பேறும்*

சுவாமிகள் வாழ்வில் பல கனவுகள் தோன்றிக் குறிப்பு உணர்த்துகின்றன.இறையருள் பெற்றோர்க்குத் îதான்றும் கனவுகள் பலிக்கும். அஃதில்லார் கானும் கனவுகள் வெறும் கானல் நீராய் மறையும்,

*சுவாமிகள் வாழ்வில் கண்ட கனவுகள்:*

*கனவு1.* அழகிய திருமேனிச் சைவர் ஒருவர் தோன்றி இவரை அழைத்துச் சென்று வாழையிலை போட்டு அன்னமும் பாலும் கலந்தளித்து “இதை நீ உண்பாயாக” எனக் கட்டளையிட இவரும் உண்டு மகிழ்ந்தார். அதன்பின் கவிபாடும் ஆற்றல் தன்னுள் மிகுந்ததை உணர்ந்தார்.

*கனவு 2.* சுவர்க்க நரகக் கனவு: பாம்பன் பதியில் வாழுங்கால். ஓர் நாள் கனவில் ஒரு பாதை வழியே செல்ல அப்பாதை பிரிந்து வேறோர் பாதை தோன்ற இவர் அவ்வழியே சென்றார்.

கற்றாழையும் கள்ளியும் நிறைந்த காட்டை கண்டார். கருநிறத்தவர்களாய் கரித்துணிகளை அணிந்திருந்த சிலர் தன் மீது கல்லையும் மணலையும் வீசி எறிவதையும் ஏசுவதையும் கண்டார். பலத்த தேகிகள் மூவர் இவரை அணுகி “எம்முடன் வருக” என அழைத்து தென்திசை நோக்கி நடந்தனர். மூவருள் இருவர் இவர் இரு கரங்களையும் நன்கு பற்றிக் கொண்டனர். எதிரே தூய வெண் மணற் பூமி காணப்பட்டது அங்கே நறுமனம் வீசக் கனிமரங்கள் பல நிறத்தவாய்க் கண்டார்.

அங்குள்ள மாந்தர் அக்கனிகளை உண்ட வண்ணம், ஒருவரோடொருவர் அளவிளாவி மகிழ்கின்ற காட்சியையும் கண்டார். சுவர்க்க நரகங்கள் உண்டென்பதையும் அது குறித்து விசாரம் கொள்ளா வேண்டாமென்பதையும் உணர்த்திட இக்கனவு தோன்றியதாகச் சுவாமிகள் அறிந்து மகிழ்ந்தார். பாம்பன் சுவாமிகள் கனவில் வந்து அடியார்க்கு அருளிய அருளாடல்கள் பல. சுவாமிகள் கனவில் வந்து தீட்சை கொடுத்தோக வாரியார் சுவாமிகள் தன் வாழ்க்கை வரலாற்று நூலிற் கூறுகின்றார்.” நான் சிறிது நேரம் தேவாரம் கேட்டுவிட்டு ஒரு அன்பர் வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினேன்.

விடியற்காலை 4 மணிக்கு நான் ஒரு வயல் வெளியில் சென்று கொண்டிருந்த பொழுது பாம்பன் சுவாமிகள் அங்கு வந்து எனக்கு சடக்கர மந்திரம் கனவில் உபதேசித்த காரணத்தினால் சென்னையில் என் இல்லத்தில் பூஜை அறையில் நடுவில் முருகன் திருவுருவமும் ஒரு புறம் அருணகிரிநாதர் திருவுருவமும் மற்றொரு புறம் பாம்பன் சுவாமிகளின் திருவுருவமும் வைத்து இன்றும் வழிபடுகின்றேன் வழிபாட்டின் போது பாம்பன் சுவாமிகளின் திருவருளை நினைந்து கண்ணீர் வடிப்பேன்.

*இல்லறமும் நன் மக்கட்பேறும்*
இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது இவர் உள்ளம் துறவறத்தையே விரும்பிய போதிலும் சேதுமாதவரின் கட்டளைப்படி இவர் திருமணம் ஏற்றார். மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய திருநிறைச் செல்வி காளிமுத்தம்மாளை வெகுதான்ய ஆண்டு வைகாசித்திங்கள்(கி.பி.1878) மங்கல ஓரையில் இராமநாதபுரத்தில் மணம் செய்து கொண்டார்.

3 ஆண்டுகளுக்குப்பின் முருகையபிள்ளையும் சிவஞானாம்பாளும் பின் குமரகுருதாச பிள்ளையும் பிறந்தனர். சுவாமிகள் தன் ஞானவாக்கியத்தில் “சேய்பெண்டு சுற்றம் மாய்கின்ற மட்டும்” என்றும் “ஞண்டுச் சூல் போல் ஒண்டொடி விழைவு” என்றும் உரைத்துள்ளமையால் அவர் உள்ளம் எஞ்ஞான்றும் துறவறத்தையே விரும்பியது என்பதை நாம் அறியலாம்.

*துறவு நசையும் தூயோன் வசையும்*

சுவாமிகள் துறவு விழைந்து இருக்குங்கால் நண்பர் அங்கமுத்துப்பிள்ளை அவன் வரத் தன் எண்ணத்தை மறைத்து “நாளை நான் பழநிபதி செல்லவுள்ளேன்” எனக் கூறியதும் நண்பர் “மீண்டெப்போது வருவீர்கள்?” என சுவாமிகள் “சொல்ல இயலாது” என்றார். உடனே நண்பர் தடுத்து “இது குமரக் கடவுள் கட்டளையோ? என வினவச் சுவாமிகள் துறவு வேட்ககையால் “ஆம்” எனத் தலையசைத்தார். அடுத்தகணம் சுவாமிகள் விண்ணை நோக்க அங்கே முருகப் பெருமான் முகத்தில் வினைக்குறி தோன்ற “எனது கட்டளை என்று பொய் புகன்றனை, அதனால் நான் கட்டளையிடும் வரை பழநிப் பதிக்கு நீ வரலாகாது” எனப் பல்லைக் கடித்து சுட்டு விரலை நீட்டிச் சீறும் காட்சியைக் கண்டார்.

கண்ணீர் பெருக சுவாமிகள் உள்ளத்தில் “என்னப்பனே ஆன்மலாபம் கருதி அடியேன் செய்த இச்சிறு தவறை மன்னிக்கலாகாதா” என வேண்ட செவ்வேட் பரமன் “அந்த லாபம் என்னாலாகாதா?” என்று திருவாய் மலர்ந்ததையும் சுவாமிகள் கேட்டு “அப்படியே ஆகட்டும்” என அக்காட்சி மறைந்தது.

சுவாமிகள் வரலாற்றில் இந்நிகழ்ச்சி உணர்த்தும் உண்மைகள் பல இறைவன் ஒருவன் உளன் என்பதும் எங்கும் இருந்து எல்லாவற்றையும் அறிவாள் என்பதையும் ஆன்மலாபம் அவனருளாற் பெற வேண்டுமே ஒழிய நாம் வலிந்து முயலல் தவறு என்பதும் எந்நிலையிலும் பொய்யுரைத்தல் பாவம் என்பதும் உணர்த்தப்படுகின்றன. சுவாமிகள் இந்நிகழ்ச்சியைத் தம் பாடல்களில் எல்லாம் பதிவு செய்திருக்கின்றார்கள். சுவாமிகள் முதல் மண்டலமாகிய குமரகுருதாச சுவாமிகள் பாடலில் 57 ஆக வருவது “திருவுயர்ந்த வாறெழுத்தன்னுவல்” ஈற்றுப்பாடல்

செந்தமிழைச் செவிமடுத்து மகிழுந் தேவைத்
திறலிடும்பன் உயிர்முருக்கி எழுப்புந் தேவைப்
புந்தி நிறைவுடையரு ணகிரி சூழ் தேவைப்
புகரிகந்த கரவருடங் கடகமாதம்
வந்தவொரு புகரிரவிற் பழநிக் கோவில்
வரஇஞ்ஞான் றருளவில்லை யருள்வே மந்நாள்
பந்தமற வருதியெனப் பணித்துப் போந்த
பண்ணவனைப் படர்பவரெம் பரமர் தாமே.

என வருதல் காண்க. முருகன் இசைவு இறுதிவரை கிட்டாத கரணியத்தால் சுவாமிகள் பழநி செல்லவில்லை.

பாகம் 6

சந்தமுனிக்குக் குருபூசை கண்டார்

சுவாமிகள் “அருணகிரிநாதர்” பால் அளவற்ற காதல் கொண்டு அவரையே தம் வழிபடு குருவாக எண்ணித் தம் பாடல் ஈற்றில் எல்லாம் அருணகிரிநாதரை “மண்ணும் வானமும் மெச்சப் பாடினோன்” என்றும் “ஓசைமுனி” என்றும் “சந்தமுனி” என்றும் “தீஞ்சொல் அருணகிரி”, “தௌ்ளறிஞர்” என்றும் ஏற்றியுரைத்து மகிழ்ந்ததோடு தமது ஏக தெய்வ வழிபாட்டுக்கு முன்னோடியாகவும் அருணை முனிவரையே கொண்டார். மேலும் சுவாமிகள் இளமையிற் கூடாவொழுக்கம் பூண்டொழுகினார் என்பதையும் மறுத்து முன்வினையால் அவர் தொழுநோய் பெற்றாரென்றும், அவர் சிற்றின்பத்தை மிகுதியாகத் திருப்புகழில் பாடியிருப்பது வண்ணப்பாவின் இலக்கண மரபு என்றும் சென்னையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அஃது அன்பர்களால் குறிப்பெடுக்கப்பட்டு சிறுநூலாகவும் “ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் சரித்திரச் சுருக்கம்” என வெளியிடப்பட்டது. தம் கனவில் இறைவன் அறிவுறுத்தியபடி அருணகிரிநாதர் குரு பூசையை உத்தராயணத்து ஆறாவது பௌர்ணமிதோறும் நடாத்தச் சுவாமிகள் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். சுவாமிகள் திருஅல்லிக்கேணி திருவட்டீசுவரன் ஆலயத்திற்குத் தம் செலவில் அருணகிரிநாதர் உற்சவர் விக்ரகமும் தந்து அருளியுள்ளமையால் அருணகிரிநாதர் பால் சுவாமிகள் கொண்ட பக்தி அளவிடற்கரியது.

கால்முறிவா? சூல்முறிவா?

1923ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 27ஆம் நாள் பகல் சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, நான்கு குதிரைகள் பூட்டிய கோச் வண்டி ஒன்று மோதியது. சுவாமிகளின் இடது கணைக்கால் மீது வண்டிச்சக்கரம் ஏறி நின்றதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவ்வமயம் சுவாமிகட்கு எல்லா உதவிகளையும் திருவல்லிக்கேணி சோதிடர் சுப்பிரமணிய தாசரும், அவரது மனைவி பாப்பாத்தி அம்மாளும் செய்தனர். சுவாமிகள் உப்பு நீத்து உண்டவர் என்பதால் கால் எலும்பு கூடுதல் அரிதென ஆங்கில மருத்துவர்கள் கூறிவிட்டனர். சுவாமிகள் அமைதியாகத் தம்மைப் பார்க்க வந்தோரிடம் எல்லாம் “சண்முக கவசம்” ஓதுக என கட்டளை இட்டார்கள். மூவரே அவ்வாறு சண்முகக் கவசம் ஓதத் தொடங்கினர். மூவருள்ளும் சுப்பிரமணிய தாசர் எனும் சின்னசாமிப் பிள்ளைக்கு அருட்காட்சி கிட்டியது. சுவாமிகள் ஸ்ரீமத் குமாரசுவாமியத்தில் இதனைப் பதிவு செய்கின்றார்கள்.
“அசோக சால வாசம்” எனும் தலைப்பின் கீழ் –

“மூவரே சண்முகக் கவசம் சொலும்
நாவராயினர் தத்தம் இன்னணியம்
மூவருள்ளும் முன்னாம் அல்லிக் கேணியான்
மாவுரம் கொடு நீடு வழங்கினான்
காலாறும் சொல் எழுங்கடியின் முரி
காலிரண்டு படாதிரு கட்டு வேல்
மேலின் மாட்டியொர் வேலின் நிறுத்த அக்
காலை நன் கெதிர் கண்டனேனே அவன்.”

இவ்வாறு சண்முக கவச பாராயணத்தை சின்னசாமி சோதிடர் நிகழ்த்தும் போதெல்லாம் சுவாமிகளின் முறிந்த காலும் அதை இருவேல்கள் தாங்கி நிறுத்திப் பொருத்தும் காட்சியையும் கண்டு அட்சோதிடர் பேருவகை அடைந்தார். கலியுகத்தில் இவ்வாறு நிகழ்ந்த அற்புதமானது கந்தன் கருணைக்கோர் நந்தா விளக்காய் நானிலத்தில் ஒளி பாய்ச்சுகிறது.

பாகம் 7

இருமயில் தோற்றமும் இணையிலாக் காட்சியும் (மயூரவாகனசேவனம்)

சுவாமிகள் சிகிச்சைக்காகப் பொது மருத்துவமனையில் தங்கியிருந்த 11வது நாள் இரவு ஆசிரியர் படுக்கையிலிருந்தபடியே ஓர் அற்புத காட்சி கண்டார். குமாரபகவானின் வாகனமாகிய இரு மயில்கள் மேற்கு திசையிலிருந்து நடனமாடிக் கொண்டு வருகின்றன.

வலப்பக்கம் வந்த பெரியமயிலுடன் இடப்பக்கம் வந்த ஒப்பற்ற அழகிய மயில் சிறியது. நடனமாடி வந்தபோது அவற்றின் கால்கள் தரையில் பதிய வில்லை. அவற்றின் நிறம் பொன்னிறம் மிகுந்த ஒப்பற்ற பச்சை நிறமாகும். இக்காட்சியைக் கண்டு சுவாமிகள் மனம் மகிழ்ந்து, இரு கரங்கூப்பித் தொழுதார்.

தன் படுக்கையில் தன் பக்கத்தில் சேய்ப்பரமன் கால் நீட்டித் துயிலும் நுட்பம் அறிந்தவுடன் அக்காட்சியும் மறைந்தது. அப்பொழுது வானிலிருந்து “இன்னும் பதினைந்து நாட்களுக்குள் புண்ஆறிவிடும். அது வரையில் மருத்துவமனை விட்டுச் செல்லல் வேண்டா” எனும் ஒலியும் கேட்டது. சுவாமிகள் முருகனின் கருணையைப் பெற்ற இந்நிகழ்ச்சியானது உலகுக்கு அவன் பெருமையை உணர்த்தியîதாடு சுவாமிகளின் பெருமையையும் உலகறியச் செய்தது சுவாமிகள் மகிழ்ந்து இந்நிகழ்ச்சியை

“முன் காலை உதைத்தவன் கால் முளையாய் நின்றாய்
பின் காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
என் காலை இனிது அளித்தாய் இனி எஞ்ஞான்றும்
நின் காலை எனக்குஅளி என்றான் அந்நீத்தோன்”

அசோக சால வாசத்தில் பதிவு செய்துள்ளார்கள். சுவாமிகள் மறையும் வரை சென்னை நம்புலையர் தெரு சகந்நாத முதலியார் இல்லத்தில் இம் மயூர சேவன விழாவைத் தாமே முன்னின்று நடத்தினார்கள். சுவாமிகள் மறைவுக்குப்பின் திருவான்மியூர் சமாதிக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இம் மயூர வாகன சேவன விழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. சுவாமிகள் இவ்விழாவை எப்படிக் கொண்டாட வேண்டுமெனத் தாம் இறுதியாக உரைத்த “செவியறிவுறூஉ”ல் குறிப்பிட்டது பின்வருமாறு.

இருமயில் தோற்றமும் இணையிலாக் காட்சியும் (மயூரவாகனசேவனம்)

மார்கழி மாதத்துப் பூர்வ பட்சம் பிரதமை தோறும் ஏற்படக் கூடிய இச் சேவனத்தில் விமானத்தின் மிசை விக்கிரகம் இருத்தி வெளியே தூக்கிச் செல்லல் இல்லை. செய்யொணாதது என்பதே எனது துணிபாம். எழிலுடை இரண்டு கோழிக் கொடிகளுக்கும் வேல்களுக்கும் வச்சிராயுதத்துக்கும் புட்ப மாலைகள் சார்த்தப் பட்டுச் சந்தன தூப தீப உபசாரங்களோடும் நல்ல வாத்தியா தோத்திரங்களோடும் இனிது அலங்கரிக்கப்பட்ட வீதியில் அவை உலாவி இருப்பிடம் அடையத்தக்கன.

சிறந்த ஆயுதம், குடை முதலியன கூடச் செல்லலாம். மற்றும் சிறப்புகள் பல புரியலாம். இருப்பிடத்தே மயூர வாகனப் பரமன் படத்தைப் பூந்தொடையல்களால் அலங்கரித்து விடியுங்காணும் சண்முக சகச்சிர நாமார்ச்சனை புரிதலோடு அசோக சால வாசமும் படித்தல் வேண்டும்.

அருட்பெருங் கடலின் மகிமைகளைக் குறிப்பாக எடுத்து விளம்பும் இது படியாமே இத்திருவிழா நடைபெறுவதில்லையாம். அடுத்த தினம் அடியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னமும் பயசு கலந்த மதுர பானமும் குறைவிலாது நல்கி உபசரித்தல் புரியத்தக்கது. பண வருவாய் அதிகம் ஏற்படின் பகர்ந்தது போந்த பரம காரியங்கள் ஏற்புடைமையில் பல திலைகள் புரிதலும் ஏற்புடைத்தே. ஞான பூஜையை அனுசரித்து நடப்பதே இப்பரம காரியங்கள் என எண்ணுக. செவியறிவுறூஉ….

பாகம் 8

குகசாயுச்சிய நிலை பெறுதல்

சுவாமிகள் தனது சீடருள் ஒருவராகிய பு.சின்னசாமி சோதிடரை அழைத்து “திருவான்மியூரில் நிலம் பார். அது விரைவிலாக வேண்டும்” என்று கட்டளை இட்டார்கள்.....

அதன் படியே சோதிடரும் நிலம் வாங்கிப் பதிவு செய்து அணியமாக இருந்தார்கள்.

குருவாரம் (30.05.1929) காலை 7.30 மணிக்குச் சுவாமிகள் யாருமறியாமலேயே சுவாசத்தை உள்ளுக்கிழுத்தார்கள். அது வெளிவராமல் உந்தியிலேயே எழும்பி அடங்குவதாயிற்று. அந்நிலையே இந்நிலையாக

“நண்ணறிய சிவானந்த ஞானவடிவேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசமர்ந்திருந்தார்”

எனும் வாக்கிற்கேற்பச் சுவாமிகள் செவ்வேட்பரமனின் சேவடி நிழலில் சேர்ந்து, அருள் புரிந்தார்கள்.

பின்னர் சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமக எடுத்து வரப்பட்டு 31-5-1929 வெள்ளிக் கிழமை காலை 8.15 மணிக்கு திருவான்மியூரில் சேர்க்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டது.

சுவாமிகள் அவ்வாலயத்தில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றார்கள். தண்ணருளைச் சொரிகின்றார்கள். திருவான்மியூர்க் கோலம் காணும் பேறு பெற்றோர் வாழ்வில் இடர் நீங்கி எல்லா நலம் பெறுவர் என்பது சத்தியம்.

ஸ்ரீமத்-குமருகுருதாச சுவாமிகள் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமத்-குமருகுருதாச சுவாமிகள் திருவடிகளே சரணம்.

ஸ்ரீமத்-குமருகுருதாச சுவாமிகள் திருவடிகளே சரணம்.

ஓம் குமர குருதாச குருப்யோ நம:

ஓம் குமர குருதாச குருப்யோ நம:

ஓம் குமர குருதாச குருப்யோ நம.....



த.விஐயகுமார் அகமுடையார்,
அகமுடையார் அரண்.

Friday, February 1, 2019

வள்ளல் பச்சையப்ப முதலியார் தபால் தலை


புதுச்சேரி சர்வோதய தலைவர் , விடுதலை வீரர் எஸ் ஆர் சுப்பிரமணியன்

பைந்தமிழ் சித்தர் பா.வே.மாணிக்க நாயக்கர்

பைந்தமிழ்ச் சித்தர்
பா.வே.மாணிக்க நாயகர் வாழ்க்கை வரலாறு

தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஒரு கட்டிடப் பொறியாளர் என்பது பலரையும் வியக்க வைக்கும். புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், தோட்டக் கலை, குதிரையேற்றம், தையற்கலை, மோட்டார் வண்டி பழுது பார்த்தல் ஆகியவற்றில் பல்கலை வித்தகராக ஒருவர் திகழ்ந்தார். அவர் வேறு யாருமல்ல, தமிழறிஞர் என்று போற்றப்படும் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார்.

இவர் சேலம் மாவட்டம் பாகல்பட்டி என்னும் சிற்றூரில் 1871-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 2-ஆம் நாள் பாகல்பட்டி அகமுடையார் குடும்பத்தைச் சேர்ந்த வேங்கடசாமி் - முத்தம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

இவருக்குப் பெற்றோர் மாணிக்கம் என்று பெயரிட்டனர். பிற்காலத்தில் இவர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்று அழைக்கப்பட்டார். " பா" என்பது பாகல்பட்டி ஊர் பெயரையும், " வே" என்பது தந்தை பெயரையும் குறிக்கும்.

இவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் "நாயக்கர்" என்ற பட்டம் சாதியை குறிப்பது அல்ல. இவரின் தாய்மொழி தமிழ். இவரின் முன்னோர்கள் விசயநகரப் பேரரசின் படைப்பிரிவில் பணியாற்றி வந்ததால், பெயருக்குப் பின்னால் "நாயக்கர்" எனும் பின்னொட்டை பயன்படுத்தி வந்தனர். இவரும் முன்னோர் மரபை பின்பற்றி பெயருக்கு பின்னால் " நாயக்கர்" என்று சேர்த்து கொண்டார். நாயகர் என்ற தமிழ்ச் சொல்லே நாயக் , நாயக்கர், என்று பிறமொழிகளில் வந்தது. நாயகர் சொல்லுக்கு தலைவர் என்று பொருள். இனி அவரை கட்டுரையில் 'மாணிக்க நாயகர்' என்றே அழைப்போம்.

பாகல்பட்டியில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளியில் மணலில் எழுதிப் பழகி வந்தார் மாணிக்கம். அப்போது சோதிடன் ஒருவன் பன்னிரண்டு வயது வரை குழந்தையை வெளியில் அனுப்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறிடவே, இதனை நம்பிய பெற்றோர் வீட்டிலேயே மாணிக்கத்திற்கு கல்வி புகட்டி வந்தனர்.

பதிமூன்றாம் வயதில் சேலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மாணிக்கம் சேர்க்கப்பட்டார். அந்த இளம்வயதில் தமிழில் கவிபாடும் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் சேலம் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, 1886இல் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். இவரின் குடும்பம் ஜமீன் குடும்பம் என்ற போதிலும், வறுமையில் வாடியது. அப்போது மாணிக்கத்தின் கல்வி கற்கும் திறனை உணர்ந்த இரா.முனுசாமி நாயுடு என்பவர் இவரின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

பொறியியல் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணக்கராக தேர்ச்சி பெற்றார். கல்லூரி நிர்வாகம் இவருக்குத் தங்கம் பதக்கம் அணிவித்து கெளரவித்தது. 1896ஆம் ஆண்டில் இவருக்கு
பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்தது. பொறியியல் பணியில் இவர் சிறந்து விளங்கியதால் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் தரப்பட்டன. உதவிப் பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் என்று பதவி உயர்வு பெற்ற இவர் சேலம், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, குண்டூர், பெஜவாடா, வால்டேர் ஆகிய ஊர்களில் பணியாற்றினார்.

சேலம் மாவட்டம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை இடத் தெரிவிலும், சென்னை பூண்டி நீர்த் தேக்கத் திட்டத்திலும் இவரின் பங்கு முதன்மையானது.

1912ஆம் ஆண்டு மாணிக்க நாயகர் திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வடநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது, அவரின் நண்பரும், உறவினருமான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களை உடன் அழைத்துச் சென்றார். அப்போது தில்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் ஓவியத்தில் சிறந்து விளங்கிய வெ.இராமலிங்கனார் அவர்கள் மன்னரின் உருவப்படத்தை வரைந்து தந்ததோடு, தங்கப் பதக்கமும் பெற்றார். இதற்கு மாணிக்க நாயகரே முழுக் காரணம்.

1913இல் மாணிக்க நாயகர் சட்டக் கல்வி பயில இங்கிலாந்து சென்றார். அத்தோடு, அங்குள்ள தொழில் நுட்பப் பள்ளியில் காரை கட்டிட வேலை குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். அதில் கட்டுமான பணிக்கு உதவும் 500
கூட்டுக் கணக்குகளை ஒரே நொடியில் கண்டறியும் 'கால்குலோகிராப்'
( calculograph) கணக்கு முறையை அறிவித்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

மாணிக்க நாயகர் தமது பணியின் இடையே கிடைத்த ஓய்வு நேரங்களிலும், நீண்ட கால விடுப்பு காலங்களிலும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. மாணிக்க நாயகர் அவர்கள் மறைமலையடிகள் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கக் கொள்கையில் பற்றுறுதியோடு விளங்கினார். மறைமலை அடிகள் இவரை தம் நாட்குறிப்பில், "இவர் ஓர் தனித்திறமார் பேரரறிஞர் (மேதை)" என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, மொழியியல், அறிவியல் தமிழ்ச் சொற்கள், கணக்கியல் ஆகிய துறைகளில் தமது ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார்.

தொன்மையும், தெய்வத்தன்மையும் கொண்ட மொழி தமிழே என்றும், தமிழால் உலக மொழிகளை எழுதவும் முடியும், எழுதிப் படிக்கவும் முடியும். உலகில் தோன்றிய அனைத்துக் கலைகளையும் தமிழில் எழுதவோ, எழுதி அறியவோ முடியும் என்பதே மாணிக்க நாயகர் வந்தடைந்த முடிவாகும்.

1917இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியக் கழகத்தின ஆண்டு விழாவில் தமிழ் எழுத்துகளின் அமைப்பு முறைகளை விளக்கும் " தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம்" ( The Tamil Alphabet its Mystic Aspect )எனும் தலைப்பில் உரையாற்றினார். இதில் உயிர் எழுத்துகளான பன்னிரெண்டு எழுத்துகளில் குறில் எழுத்தான 'ஒ' எழுத்து சிறப்பானது என்றும், அதுவே எல்லா எழுத்துகளுக்கும் மூல எழுத்தும் என்றார். இதற்கு திருமூலரின் "ஒமென்னும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஒமெனும்" என்று தொடங்கும் திருமந்திரப் பாடலை சான்று காட்டினார். தமிழ் எழுத்துகளில் தாம் கண்ட மறை பொருள் கொள்கை நிலைப்பாட்டை யாவரும் ஏற்க வேண்டும் என்று அறுதியிட்டு கூறவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார்.

மேலும், அவர் தமிழ் எழுத்துகளை ஒலியியல் (phonetics) என்றும், வடிவியல் (Form) என்றும் வகைப்படுத்தினார். ஒலி உச்சரிப்பை படித்தவர்கள் தவறாகவும், கல்வி பயிலாத மக்கள் சரியாகவும் பயன்படுத்துவதாக கூறியதோடு, சென்னை பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் தமிழ் உச்சரிப்பை ஆங்கில எழுத்துகளில் அச்சிட்டு இருப்பதை கண்டித்துப் பேசினார்.

எடுத்துக் காட்டாக, F, S - என்ற இரண்டு எழுத்திற்கு ஒலியையும், வடிவத்தையும் உருவாக்க இயலும். இதனை ஃபோர் - Four, ஃபவ்- Five என்றும், ஃசிக்ஃச் -Six, ஃசெவன் - Seven என்றும் எழுதுவதன் மூலம் வேறு அயல்மொழி எழுத்து வடிவங்களையும், ஒலிகளையும் தமிழில் கொண்டு வர முடியும் என்றார்.

"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்ற தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

மாணிக்க நாயகர் தாம் நிகழ்த்திய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். அதில் முதன்மையாக மூன்று கட்டுரைகளை குறிப்பிடலாம். இக்கட்டுரைகள் அக் கால மெய்யியல் அறிஞர்களிடமும், மொழியியல் அறிஞர்களிடமும் பெருந்தாக்கத்தை உண்டாக்கின. முதலிரண்டும் மெய்யியல் தொடர்பானது. அடுத்தது தமிழ் ஒலி இலக்கணம் பற்றியது. அது பின்வருமாறு:
1. The Tamil Alphabet and it's Mystic
2. The Evolution of Intellect in Co- ordination with God
3. Tamil Phonetics

2.10.1920இல் சேலம் நகராட்சி கல்லூரி மண்டபத்தில் "தமிழகம்" எனும் தலைப்பில் "இலெமூரியக் கண்டம்" குறித்த மாணிக்க நாயகரின் உரை அறிவியல் நோக்கோடு இருந்தது.

மண்ணுலகம் தொடக்கத்தில் நெருப்பு உருண்டையாக இருந்ததென்றும், பின்னர் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியே முதலில் குளிர்ந்ததென்றும், அந்த குளிர்ந்த பகுதியில்தான் தமிழகம் அமைந்திருந்ததாகவும், அதன் தெற்கில் இருந்த பெயரே இலெமூரியா என்றும் குறிப்பிட்டு விட்டு, அது எப்படி கடலில் மூழ்கியது என்பதை பின்வருமாறு விளக்குகிறார்;

"ஆஸ்திரேலியா ஒரு விந்தையான நாடு. உலகின் மற்ற நிலப்பகுதியில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள தாவரங்கள், விணைப்பறவை, சுவர்க்கப் பறவை, ஏமு, கங்காரு முதலிய விலங்குகள் வேறெங்கும் காணப்படாதவை.

"ஆகவே ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நமது நில உலகத்துடன் சார்பு பெற்றிராத ஒரு நில உருண்டை என்பதே. இது ஒரு விண் வீழ் மீன் ( வானிலிருந்து விழுந்த பெரிய எரிகல்) இது இருவகை இயக்த்துடன் (1) தன்னைத்தானே பூமி சுற்றுதல், (2) கதிரவனன சுற்றி வருதல், கூடிய உலகின் மீது வீழ்ந்த போதுதான் இலெமூரியா கடலில் மூழ்கியது. அப்போதுதான், சிந்து கங்கைச் சமவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதிகள் வெளிக் கிளம்பின."

ஆஸ்திரேலியா விண்ணிலிருந்து தென்கடலில் விழுந்த ஒரு அயல்கோள் என்பதே அவரின் கருத்தாகும். மேலும், இலெமூரியா கடல் கொள்ளப்பட்ட போது அங்கு வாழ்ந்த மக்கள் வடதிசை நோக்கிச் சென்றதாக தமது உரையில் குறிப்பிடுகிறார். தற்போது இலெமூரியக் கண்டம் பற்றி விரிவான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 90 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க நாயகர் கூறியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

1923இல் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதிய "தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி" நூலினை மதுரை தமிழ்ச்சங்கம் வெளியிட்டது. இந்த நூலினைப் படித்த மாணிக்க நாயகருக்கு பல்வேறு ஐயங்கள் எழுந்தன. இவர் தாம் பணியாற்றி வந்த பெர்காம்பூரில் (ஒடிசா) இருந்து நான்கு கடிங்கள் எழுதினார். இவற்றுக்கு மு.இராகவையங்கார் இரண்டு கடிதங்கள் வாயிலாக வினா வகையில் பதில் எழுதினார். இந்த வினா தொடர்பாக நா.மு.வேங்கட சாமி நாட்டாரும் மாணிக்க நாயகருக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்.

தொல்காப்பியர் கால மறை என்பது வடமொழி கலவாத தூய தமிழ் மறை என்பதே மாணிக்க நாயகர் எழுப்பிய வினாவின் கருத்தாகும். தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டே வடமொழியும், தமிழும் கலந்து வந்துள்ளது என்பதே மு.இராகவையங்கார் தந்த விடையின் கருத்தாகும்.

மாணிக்க நாயகர் எழுதிய கடிதங்களைப் படிப்போருக்கு தொல்காப்பியத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும். அதனால்தான் என்னவோ, திரு.வி.க. இவரைப்பற்றி கூறுகிற போது, "தொல்காப்பிய கடலை நாளும் கடைவார்" என்றார்.

மூவரும் எழுதிய எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924 இல் தமது சொந்தச் செலவில் மாணிக்க நாயகரே நூலாக வெளியிட்டார்.

1927ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை பால சுப்பிரமணிய பக்தசபை ஆண்டு விழாவில் மாணிக்க நாயகர் "தமிழ் அறிவியல் சொற்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு கா.சுப்பிரமணிய பிள்ளை தலைமை தாங்கினார். அக் கூட்டத்தில், " தமிழிலேயே அளவிறந்ந சொற்கள் இருக்கின்றன. தமிழ் இயற்கை மொழி. செயற்கை மொழிகளை இயற்கை மொழிகளோடு சேர்ப்பதால் தமிழ்மொழி தனது இயற்கை வளமிழந்து இறந்து விடும். தமிழ்மொழி்யானது, வடமொழி, ஆங்கில மொழி முதலியவற்றால் கலப்புற்றுக் காணப்படுவது பெரிதும் வருந்தத் தக்கதாகின்றது . இதனை நீக்கவே இச்சொற்பொழிவை ஈண்டு பேச எடுத்துக் கொண்டேன்" என்றார்.

தமிழ் அறிவியல் நூல்களில் வடசொல் கலப்பு கூடவே கூடாது என்றும், அது தெளிந்த நீருடைக் குட்டத்தில் (குளத்தில்) எருமைகளை ஓட்டிக் கலக்கிச் சேறாவதற்கு ஒப்பாகும் என்று அழுத்தந் திருத்தமாக இரண்டு மணிநேரம் பேசினார்.

ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் தமிழ்ச்சொற்களை பயன்படுத்தியதையும், அது உருமாற்றம் பெற்று இவ்வாறாக,
அலகை- ஆலோ, இஞ்சி- ஜிஞ்சர், முருங்கை- மொருங்கி, ஒதிய மரம்- ஒதினா, ஆடாதோடை- ஆடாதோடாவாசிகா, மாங்காய்- மேங்கோ என்று அழைக்கப்பட்டு வருவதையும் எடுத்துக் காட்டினார்.

மாணிக்க நாயகர் எழுதிய பெரும்பாலான ஆங்கிலக் கட்டுரைகளையும், தமிழ்ச் சொற்பொழிவுகளையும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான 'செந்தமிழ்ச் செல்வி' ஏடு வெளியிட்டது.

இவரது உரைகளை தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்
காழி.சிவ.கண்ணுசாமிப் பிள்ளை,
க.ப.சந்தோசம் ஆகியோர் ஆவார். நீதிக்கட்சி ஆதரவாளராகவும் மாணிக்க நாயகர் விளங்கியதால், அவரின் பல ஆய்வுக் கட்டுரைகளை "ஜஸ்டிஸ்" ஏடு வெளியிட்டது.

மாணிக்க நாயகர் பிராமணீய மத, மூடநம்பிக்கை கருத்துகளை எப்போதும் எதிர்த்துப் பேசுபவர். அது சமய நூல்களில் வெளிப்படும் போதும் எதிர்க்கத் தயங்காதவர். கம்ப இராமாயாணத்தை மிகச் சிறந்த தமிழிலக்கிய நூலாகக் கருதினாலும், அது ஆரியர்களுக்கு ஏற்றம் தரும் நூலாகவே கருதினார்.

1919ஆம் ஆண்டு குன்னூர் ஆனந்தாஸ்ரமம் மகரிசி சிவத்தியானாந்த சுவாமிகள் வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பன் பிறழ்ந்து நிற்பதை குறிப்பிட்டு கடிதம் எழுதினார். அதுமுதலே இராமயண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். வால்மீகியின் நூலில் காட்டும் ஆரிய ஒழுக்கத்திற்கும், கம்பன் காட்டும் மக்கள் ஒழுக்கத்திற்கும் வேறுபாடு இருப்பதை உணர்ந்ததால் கடும் எதிப்பைக் காட்டினார்.

1931இல் சென்னை பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தில் மறைமலையடிகள் முன்னிலையில் "கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்" என்ற தலைப்பில் மாணிக்க நாயகர் உரை நிகழ்த்தினார். அது பின்னர் நூலாகவும் வெளி வந்தது.

பெரியாரும், அண்ணாவும் கம்பராமாயணத்தை எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்தவர் மாணிக்க நாயகர். பெரியாரும் கூட இவரிடமிருந்தே இராமாயண எதிர்ப்பை கற்றுக் கொண்டார். மாணிக்க நாயகரும் பெரியாரின் நெருங்கிய நண்பர்கள். ஈரோட்டில் வெ.இராமலிங்கனாரும், பெரியாரும் மாணிக்க நாயகரை சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்போது மாணிக்க நாயகர் ராவணனை உயர்த்திப் பிடித்து "ராவாயாணம்" பேசுவதை பெரியார் ஆர்வத்தோடு கேட்டதாக வெ. இராமலிங்கனார் தாம் எழுதிய 'என்கதை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்க நாயகர் இறக்கும்வரை தமிழுக்கு உழைப்பதை நிறுத்திக் கொள்ள வில்லை. 1931ஆம் ஆண்டு திசம்பரில் சென்னை திருமயிலை சன்மார்க்க சகோதரத்துவ சங்க விழாவில் "மொழி முதற் தமிழர் கடவுட் கொள்கை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருந்தார். அவர்உடல்நலம் குன்றி வரமுடியாமல் போனதால் மகன் குணா மாணிக்கம் உரையைப் படித்தார்.

மொழி முதல் தமிழர் தமது கடவுள் கொள்கையை ஏடுகளில் எழுதவில்லை என்றும், தமிழ்மொழி அமைப்பிலே கடவுள் கொள்கை இருப்பதாகவும், கல்லிலோ, மண்ணிலோ தமிழர் வழிபாடு நடத்தவில்லை என்றும், தொல் காப்பியம் கூறுகின்ற கொடிநிலை, கந்தழி, வள்ளி இந்த மூன்றிலும் இறைவன் உருவமற்று அருவமாக இருப்பதாகவும் உரையில் வாசிக்கப்பட்டது. இதிலிருந்து இறுதிக் காலத்தில் அவரின் பழைய உருவ வழிபாட்டு நம்பிக்கையிலிருந்து விடுபட்டதைக் காணலாம்.

தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் மாணிக்க நாயகர் சென்னையில் உள்ள தமது மாளிகையில்தான் ஓய்வெடுத்து வந்தார். ஒருநாள் தமது சிற்றுந்தை பழுதுபார்க்கும் போது அதன் எஞ்சின் சூட்டினால் காலில் புண் ஏற்பட்டது. சர்க்கரையும், குருதி அழுத்தமும் கூடிய நிலையில் புண் ஆறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தமது அறுபதாம் வயதில் 25.12.1931 அன்று காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்தில் எழுதப்பட்ட கடைசி வாக்கியம் பின்வருமாறு:

"மண்ணில் மறைந்தாலும் மாணிக்கம் தன்னொளி குன்றாது
காற்றில் கலந்தாலும் கவின்மலர் தன் மணம் மாறாது"

மாணிக்க நாயகரின் தமிழ்த் தொண்டினை தலைவணங்கிப் போற்றுவோம்!

ஆதாரங்கள்

1. பா.வே. மாணிக்க நாயக்கர்
- பா.அன்பரசு

2. என்கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

3. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்
- குன்றக்குடி பெரிய பெருமாள்

 த.விஜயகுமார் அகமுடையார்,
 அகமுடையார் அரண்,
 புதுச்சேரி.